மகாராஷ்டிரா மும்பையில் செயல்பட்டு வரும் ஐஐடியில் கடந்த பிப்,.13ம் தேதி 18 வயதான முதலாமாண்டு மாணவர் வளாகத்தின் 7-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவரின் தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  மாணவர் இறப்புக்கு ஒருநாள் முன்பு தேர்வு முடிந்திருந்ததால், கல்வியின் அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டாரா எனும் கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் மாணவரின் தற்கொலைக்கு ஐஐடியில் நிலவிய பாகுபாடே காரணம் என்று பெற்றோர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. அதாவது, ஐஐடியில் சக மாணவர்கள் வகுப்பறையில் ஒதுக்கியதால் மன முடைந்து தன் மகன் தற்கொலை செய்துகொண்டதாக பெற்றோர்கள் தெரிவித்து உள்ளனர். இதனிடையே தற்கொலை செய்துகொண்ட மாணவரின் குற்றச்சாட்டுக்கு மும்பை ஐஐடி நிர்வாகம் மறுப்பு தெரிவித்து உள்ளது. முதலாமாண்டு மாணவன் தற்கொலை செய்து கொண்டது பற்றி பல கட்டுக்கதைகள் வெளிவருகிறது. மாணவனின் இந்த முடிவுக்கு ஐ.ஐ.டி-யில் உள்ள பாகுபாடுதான் காரணம் என சொல்வதும், இது நிறுவன கொலை என வகைப்படுத்துவதும் ஏற்கத்தக்கதல்ல என்று ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.