திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே, தனது 15 வயது மகளைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தைக்குத் தூக்கு தண்டனை விதித்து நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. கூலித் தொழிலாளியான அந்த நபர், கடந்த 2024-ஆம் ஆண்டு முதல் தனது மகளுக்குத் தொடர்ந்து பாலியல் ரீதியாகத் தொல்லை அளித்து வந்துள்ளார்.
இதனால் அந்தச் சிறுமி கர்ப்பமடைந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே சிறுமிக்குக் குழந்தை பிறந்த நிலையில், அக்குழந்தையின் டிஎன்ஏ (DNA) பரிசோதனை அறிக்கையில், குற்றம் சாட்டப்பட்ட தந்தையே அக்குழந்தைக்கு உயிரியல் தந்தை என்பது அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த போக்சோ நீதிமன்ற நீதிபதி கே. சுரேஷ்குமார், பாதுகாப்பாக இருக்க வேண்டிய தந்தையே தனது மகளைச் சீரழித்த செயல் ‘அரிதிலும் அரிதானது’ எனக் குறிப்பிட்டு, குற்றவாளிக்குத் தூக்கு தண்டனையும் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
குடும்பப் பாதுகாப்பைச் சிதைக்கும் வகையில் தந்தை செய்த இந்த கொடூரச் செயலும், அதற்கு வழங்கப்பட்ட மரண தண்டனையும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
