நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக சென்னை தாம்பரத்துக்கு இயக்கப்படும் அந்தியோதயா விரைவு ரயில் மீது மர்ம நபர்கள் கல் வீசித் தாக்கியதில் பெண் பயணி ஒருவர் காயமடைந்தார். கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் பகுதியைச் சேர்ந்த ரீனா அன்னமேரி தனது கணவருடன் இந்த ரயிலில் சென்னைக்கு பயணம் செய்துள்ளார்.
ரயில் ஆரல்வாய்மொழி அருகே வந்து கொண்டிருந்தபோது, தண்டவாளத்தின் அருகே இருந்தவர்கள் திடீரென ரயில் மீது சரமாரியாகக் கற்களை வீசினர். இதில் ஜன்னல் கண்ணாடி உடைந்து சிதறியதில், ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த ரீனா அன்னமேரியின் தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, நெல்லை ரயில் நிலையத்தில் மருத்துவக் குழுவினர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர அதிகாரிகள் அறிவுறுத்தியும், முக்கிய நிகழ்ச்சிக்காக சென்னை செல்வதால் அங்கேயே சிகிச்சை பெறுவதாகக் கூறி அவர் தனது பயணத்தைத் தொடர்ந்தார். இந்த கல்வீச்சு சம்பவம் தொடர்பாக நாகர்கோவில் ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
ரயில்வே தண்டவாளப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், தண்டவாளத்தின் அருகே மது அருந்திக் கொண்டிருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞர் பாபுரா பாராபோகே என்பவர் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தபோது ரயில் வந்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவர் கற்களை வீசியதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து அந்த வாலிபரைக் கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ரயில்கள் மீது கல்வீசி பயணிகளின் உயிருக்கு ஆபத்து விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
