செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் அருகே, மகனுக்குப் பால் காய்ச்ச முயன்றபோது கேஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறிய விபத்தில், தந்தை மற்றும் இரண்டு வயதுக் குழந்தை ஆகிய இருவரும் பலத்த தீக்காயமடைந்தனர். இப்பகுதியைச் சேர்ந்த பாரதி (32) என்பவரது மனைவி உடல்நலக் குறைவு காரணமாகத் தனது தாய் வீட்டிற்குச் சென்றிருந்த நிலையில், வீட்டில் பாரதியும் அவரது இரண்டு வயது மகன் திருக்குமரனும் மட்டும் இருந்துள்ளனர்.
காலை பசியால் அழுத குழந்தைக்குப் பால் காய்ச்சுவதற்காகப் பாரதி சமையலறைக்குச் சென்று கேஸ் அடுப்பைப் பற்றவைத்தபோது, கசிவு காரணமாகச் சிலிண்டர் திடீரென வெடித்துச் சிதறியது.
இந்த வெடிவிபத்தின் கோரத்தால் பாரதியின் மாடி வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்ததுடன், வீட்டின் சுவர்கள் மற்றும் ஜன்னல்கள் பலத்த சேதமடைந்தன.
வெடிச்சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக வீட்டிற்குள் புகுந்து, தீயில் சிக்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பாரதியையும், குழந்தை திருக்குமரனையும் பத்திரமாக மீட்டனர்.
இந்த விபத்தில் இருவருக்கும் உடல் முழுவதும் சுமார் 40 சதவீதத்திற்கும் அதிகமான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதால், அவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடித் தீயை அணைத்தனர். விபத்து குறித்து மறைமலைநகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, சிலிண்டர் கசிவுக்கான காரணம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடியிருப்புப் பகுதியில் நிகழ்ந்த இந்தத் திடீர் விபத்து மற்றும் இரண்டு வயதுக் குழந்தை தீக்காயமடைந்த சம்பவம் காட்டாங்குளத்தூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
