தனியார் நிதி நிறுவனத்தின் கடன் நெருக்கடி மற்றும் மிரட்டல் காரணமாக, ஆண்டிப்பட்டி அருகே மூதாட்டி ஒருவர் தனது பேத்திக்கு விஷம் கொடுத்துவிட்டு, தானும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அடுத்த வரதராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ரஞ்சித் (37), மதுரையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் தனது வீட்டை அடமானம் வைத்து ரூ.25 லட்சம் கடன் வாங்கியிருந்தார்.
கடந்த சில மாதங்களாக குடும்பச் சூழ்நிலை காரணமாக தவணைத் தொகையைச் செலுத்த முடியாத நிலையில், நிதி நிறுவன ஊழியர்கள் ரஞ்சித்தின் குடும்பத்தினரைத் தொடர்ந்து மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, ரஞ்சித்தின் தாயார் பஞ்சம்மாளுக்குச் சொந்தமான பூர்வீக வீட்டிலும் “இந்தச் சொத்து நிதி நிறுவனத்திற்குச் சொந்தமானது” என பெயிண்டால் எழுதி அவமானப்படுத்தியதாகத் தெரிகிறது.
இந்தத் தொடர் மிரட்டல்களால் மனமுடைந்த பஞ்சம்மாள், கடந்த 31-ஆம் தேதி தனது பேத்தி தருணிக்காவுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தானும் விஷம் அருந்தினார். எழுதப் படிக்கத் தெரியாத அவர், தனது தற்கொலைக்குக் காரணமானவர்கள் குறித்து வெளியுலகிற்குத் தெரிவிக்க, குங்குமத்தை நீரில் கரைத்து வீட்டுச் சுவரில் எழுதி வைத்துவிட்டு உயிரிழந்தார். மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட சிறுமி தருணிக்கா தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ரஞ்சித் அளித்த புகாரின் அடிப்படையில், தற்கொலைக்குத் தூண்டியதாக நிதி நிறுவன ஊழியர்கள் மாயாண்டி, கண்ணன், கார்த்திக் சேது உள்ளிட்ட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
