தமிழகத்தில் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி நடந்து வரும் நிலையில், எதிர்க்கட்சியான திமுகவைச் சேர்ந்த சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அவர்கள் அம்மா உணவகம் குறித்து வெளியிட்ட எக்ஸ் (X) பதிவும், அதற்கு பதிலடியாக நெட்டிசன்கள் அவசியமில்லாமல் அவரது பழைய வீடியோவை வைரலாக்கி வருவதும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

​சென்னை மாநகராட்சி மேயர் பிரியா நேற்று தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் ஒரு பதிவுை வெளியிட்டிருந்தார். அதில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது அம்மா உணவகங்களைத் தரம் உயர்த்தவும், மக்களுக்குத் தரமான உணவு வழங்கவும் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 2024-25 நிதியாண்டில் 20 கோடி ரூபாய் செலவில் 290 கட்டிடங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன.

2025-26 நிதியாண்டில் 7.06 கோடி செலவில் புதிய இயந்திரங்களும் பாத்திரங்களும் வாங்கப்பட்டன. இதன் காரணமாக, 2026 ஜனவரியில் அம்மா உணவக வருவாய் 1 கோடியே 13 லட்சத்தை எட்டியதுடன், ஒவ்வொரு மாதமும் 1 கோடிக்கு மேல் வருமானம் நீடித்தது” என்று கடந்த கால திமுக ஆட்சியின் சாதனைகளைப் பட்டியலிட்டு, தற்போதைய தவெக அரசிற்கு மறைமுக விமர்சனம் வைக்கும் தொனியில் பதிவிட்டிருந்தார்.

​மேலும், “சர்வதேச போர் பதற்ற சூழலால் நாடு முழுவதும் ஏற்பட்ட சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் ஏப்ரல் மாதம் மட்டுமே விற்பனை சரிந்தது, பின்னர் மாநகராட்சியின் நடவடிக்கையால் மே மற்றும் ஜூன் மாதங்களில் மீண்டும் விற்பனை 1 கோடி ரூபாய்க்கு மேல் முந்தைய நிலையை எட்டியது” என்றும் விளக்கம் அளித்திருந்தார். ​திமுகவுக்கு ஆதரவாகப் போடப்பட்ட இந்த நீண்ட விளக்கப் பதிவிற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, நெட்டிசன்கள் ஒரு பழைய வீடியோவைத் தூக்கிப் போட்டு வைரலாக்கத் தொடங்கியுள்ளனர்.

கடந்த கால திமுக ஆட்சியின் போது, இதே மேயர் பிரியா செய்தியாளர்களைச் சந்தித்த போது, “அம்மா உணவகத்திற்குப் போதிய வாடிக்கையாளர்கள் இல்லாததால் பல்வேறு இடங்களில் உணவகங்கள் மூடப்பட்டு கிடக்கின்றன” என்று கூறிய வீடியோவை தற்போது தேடிக் கண்டுபிடித்து சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பி வருகின்றனர்.

​”அன்றைக்கு உங்கள் ஆட்சியில் வாடிக்கையாளர்கள் இல்லை என்று கூறி உணவகங்களை மூடிவிட்டு, இன்றைக்கு தவெக ஆட்சியில் குறை சொல்ல வேண்டும் என்பதற்காகக் கோடி கோடியாக வருமானம் வந்தது என்று எப்படிப் புள்ளிவிவரம் கொடுக்கிறீர்கள்?” என்று மேயரின் பதிவிற்கு கீழே நெட்டிசன்கள் சரமாரியாகக் கேள்வி எழுப்பி வறுத்தெடுத்து வருகின்றனர். திமுக மேயர் பிரியாவின் சொந்த வீடியோவே அவருக்கு எதிராகத் திரும்பியிருப்பது சென்னை மாநகராட்சி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.