சென்னை வேப்பேரி ஈ.வி.கே.சம்பத் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தர்ஷன் (26), பாரிமுனையில் ஹார்டுவேர் டீலர்ஷிப் தொழில் செய்து வருகிறார். இவருக்கும், ராயபுரம் புதுமனைக்குப்பம் கல்மண்டபம் ரோடு பகுதியைச் சேர்ந்த 25 வயது ஹாசிதாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

ஹாசிதா, சிறுவயதில் இருந்தே இடது கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி. இருப்பினும், இரு குடும்பங்களின் சம்மதத்துடன் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி அண்ணாநகரில் உள்ள ஓட்டலில் இவர்களது நிச்சயதார்த்தம் நடந்து, திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வந்தன.

ஆனால், ஒரு வாரத்துக்கு முன் தர்ஷன், ஹாசிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “நீ எனக்கு வேண்டாம், உன்னை திருமணம் செய்ய முடியாது” எனக் கூறி அதிர்ச்சி அளித்தார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான ஹாசிதா, தனது பெற்றோரிடம் தர்ஷனுடன் வாழ விரும்புவதாக வேதனையுடன் தெரிவித்தார்.

இதையடுத்து, வேப்பேரியில் தர்ஷனின் வீட்டில் இரு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், தர்ஷன் மனம் மாறாமல் திருமணத்தை மறுத்துவிட்டார். இதனால் மனமுடைந்த ஹாசிதா, 7-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து வேப்பேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, காதலியை திருமணம் செய்ய மறுத்த தர்ஷனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தப் பரிதாப சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.