கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகே பள்ளியாடி பகுதியைச் சேர்ந்த 40 வயது ஜோசப் ஆன்றனி, சி.ஆர்.பி.எப். வீரராக பணியாற்றி வந்தவர். திருமணமான இவருக்கு மனைவியும், குழந்தையும் உள்ளனர். சமீபத்தில் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தவர், மீண்டும் வேலைக்குத் திரும்புவதாகக் கூறி புறப்பட்டார்.

ஆனால், வேலைக்குச் செல்லாமல், வேளாங்கண்ணியில் பிச்சை எடுப்பதாக நண்பர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதை அறிந்த உறவினர்கள், அவரை மீட்டு பரிசோதித்தபோது, மனநலம் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது.

சிகிச்சைக்காக, 4 நாட்களுக்கு முன் குருந்தன்கோடு கொடுப்பைக்குழி அருகே கரிசல்விளையில் உறவினர் வீட்டில் ஜோசப் தங்க வைக்கப்பட்டார். மறுநாள் காலை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அவரது அறைக் கதவு திறக்கப்படவில்லை.

உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, ஜோசப் ஆன்றனி வாயில் நுரை தள்ளி மயங்கிய நிலையில் கிடந்தார். அருகில், தென்னை மரங்களுக்கு வேரில் பயன்படுத்தப்படும் விஷப் பாட்டில் இருந்தது. உடனடியாக அவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால், தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, ஜோசப் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அவரது தற்கொலைக் காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பள்ளியாடி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.