சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே வீரபாண்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ராமாபுரம் ஆஞ்சநேயர் கோவில் ரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்-சிவகாமி தம்பதிக்கு கடந்த 9-ம் தேதி பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது.
ஆனால், இந்தத் தம்பதி, தேவராஜ் என்பவரின் உதவியுடன் பிறந்த பெண் குழந்தையை ரஞ்சித் என்பவருக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு விற்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இவர்கள் ஆண் குழந்தை பிறந்து இறந்துவிட்டதாக போலி மருத்துவ அறிக்கை தயாரித்து மறைத்து வந்தனர்.
இந்த கொடூரச் செயல் குறித்து சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சந்தியாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக மாவட்ட குழந்தைகள் உதவி மையம் மூலம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மகுடஞ்சாவடி காவல்துறையினர் கடந்த 20-ம் தேதி சந்தோஷ் வீட்டுக்கு சென்று விசாரித்தபோது, வீடு பூட்டப்பட்டிருந்தது.
அக்கம்பக்கத்தினரிடம் நடத்திய விசாரணையில், பெண் குழந்தை பிறந்து விற்கப்பட்ட உண்மை தெரியவந்தது. இதையடுத்து, சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், சந்தோஷ், சிவகாமி, தேவராஜ், ரஞ்சித் ஆகிய நால்வர் மீதும் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் சேலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
