கடலூர் மாவட்டம், கூத்தப்பாக்கத்தைச் சேர்ந்த 54 வயது மனோகர், வண்டிப்பாளையத்தில் உள்ள தனியார் நெசவு பட்டறையில் வேலை செய்து வந்தவர். இவர் வழக்கமாக தனது மோட்டார் சைக்கிளை பட்டறை அருகே கந்தன் என்பவரது வீட்டின் முன் நிறுத்தி வந்தார்.

இதனால், கந்தனுக்கும், மனோகருக்கும் கடந்த சில நாட்களாகவே பார்க்கிங் தொடர்பாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தப் பகை, ஒரு பயங்கரமான கொலைச் சம்பவத்தில் முடிந்து, கடலூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மாலை 4.30 மணியளவில், வழக்கம்போல் வேலைக்கு வந்த மனோகருக்கும், கந்தனுக்கும் மீண்டும் வாக்குவாதம் முற்றியது. அப்போது, கந்தன், கார்த்திகேயன் உள்ளிட்ட மூவர் சேர்ந்து மனோகரை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.

இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த மனோகரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த முதுநகர் காவல்துறையினர், உடனடியாக விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

கந்தன் உள்ளிட்ட மூவரை கைது செய்து, காவல் நிலையத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சாதாரண பார்க்கிங் தகராறு, கொலையில் முடிந்த சம்பவம் கூத்தப்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.