கோவை இடையர்பாளையத்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர் மோகனபிரியா, கடந்த கால கசப்பான நினைவுகளால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் பணியாற்றி வந்த இவர், தனது இரண்டாவது கணவர் விஜயனுடன் வசித்து வந்த நிலையில், பிரசவத்திற்காகக் கோவை வந்துள்ளார்.

ஆண் குழந்தை பிறந்து ஒன்றரை ஆண்டுகளே ஆன நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து வந்த கவுண்டம்பாளையம் போலீசார், அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், மோகனபிரியா எழுதிய உருக்கமான கடிதம் ஒன்றையும் கண்டெடுத்தனர்.

அந்தக் கடிதத்தில், தனது முதல் கணவர் அளித்த கொடுமைகள் மற்றும் சித்ரவதைகளைத் தன்னால் மறக்க முடியவில்லை என்றும், இரண்டாவது கணவர் மிகுந்த பாசத்துடன் கவனித்துக் கொண்ட போதிலும் அந்த நரக வேதனையிலிருந்து மீள முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது கணவர் மற்றும் குழந்தை மீது மிகுந்த அன்பு வைத்திருந்தும், மனதளவில் ஏற்பட்ட பாதிப்பால் வாழ்வதற்குப் பிடிக்காமல் இந்த முடிவை எடுப்பதாக அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். திருமணமாகி ஒரு சில ஆண்டுகளே ஆவதால், இது குறித்து போலீஸ் உதவி கமிஷனர் தலைமையிலான குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.