திருவள்ளூர் நீதிமன்ற வளாகத்தில் பிரபல ரவுடி ஒருவரை வெட்டிக்கொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரகசிய தகவலின் பேரில் கண்காணிப்பில் இருந்த காவல்துறையினர், தாக்குதல் நடத்தத் தயாராக இருந்த கும்பலை சுற்றிவளைத்து நடவடிக்கை எடுத்ததில் இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும், இந்த சதித் திட்டத்திற்கு தலைமை வகித்ததாகக் கூறப்படும் முக்கிய நபர் உள்ளிட்ட சிலர் தப்பியோடியதால் அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருநின்றவூரைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பெண் கவுன்சிலர் கோமதி கொலை வழக்கின் பின்னணியில்தான் இந்த சம்பவம் அரங்கேறியதாக போலீசார் தெரிவித்தனர். கடந்த 2023-ஆம் ஆண்டு நடந்த அந்த கொலை வழக்கில், கோமதியின் கணவர் ஸ்டீபன் ராஜ், அவரது மனைவியின் கள்ளக்காதலன்  ரவுடி ஜோசப் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தனர். இதற்கிடையில், வேறு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகி வந்த ஜோசப்பை பழிவாங்கும் நோக்கில் தாக்க திட்டமிடப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த தகவல் சைபர் கிரைம் பிரிவு மூலம் மாவட்ட காவல்துறைக்கு கிடைத்ததைத் தொடர்ந்து, தனிப்படை போலீசார் நீதிமன்ற வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஜோசப் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வரும் நேரத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த கும்பல், அவர் தாமதமானதால் அருகிலுள்ள பகுதியில் காத்திருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது போலீசார் திடீரென நடத்திய சோதனையில் கும்பல் சிக்கிய நிலையில், சிலர் தப்பிச் சென்றனர்.

இந்த வழக்கில் அசோக்குமார், பிரபாகரன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் பயன்படுத்திய ஆட்டோவில் இருந்து அரிவாள்கள், மிளகாய்த்தூள் பாக்கெட்டுகள் உள்ளிட்ட தாக்குதலுக்கு பயன்படுத்தப்படவிருந்த பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. தப்பியோடிய ஸ்டீபன் ராஜ் மற்றும் அவரது கூட்டாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். நீதிமன்ற வளாகத்திலேயே கொலை முயற்சி நடத்த திட்டமிடப்பட்டதாகக் கூறப்படும் இந்த சம்பவம் திருவள்ளூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.