திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வீரக்கல் கிராமத்தில் ஜெயராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திண்டுக்கல் மாவட்ட மேற்கு இந்து முன்னணி பொது செயலாளராக இருக்கிறார். இவர் புல்லுவெட்டி குளம் பகுதியில் இருக்கும் வணிக வளாகத்தில் பட்டாசு கடை நடத்தி வந்துள்ளார். அதே வணிக வளாகத்தின் மாடியில் ஜெயராமன் தனது மனைவி நாகராணி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு தீப்திகா(7), கனிஷ்கா(5), மோகன்(4) ஆகிய மூன்று குழந்தைகள் இருக்கின்றனர்.

நேற்று மாலை 5 மணிக்கு ஜெயராமனும், நாகராணியும் வீட்டில் இருந்தபோது குழந்தைகள் 3 பேரும் சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது பயங்கர சத்தத்துடன் ஜெயராமனின் மாடி வீடு இடிந்து விழுந்தது. சத்தம் கேட்டு பதறியடித்து வெளியே ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் குழந்தைகளிடம் விசாரித்த போது ஜெயராமனும், நாகராணியும் வீட்டிற்குள் சிக்கிக் கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 3 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடிபாடுகளை அகற்றி கணவன் மனைவியை மீக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இடிபாடுகளில் சிக்கி பலியான நாகராணி மற்றும் ஜெயராமனின் உடல்கள் மீட்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் பட்டாசுகள் வெடித்ததால் வீடு இடிந்தது தெரியவந்தது. வீட்டின் கீழ் தளத்தில் இருக்கும் பட்டாசுகளும் சேர்ந்து வெடித்து இருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும் என குறிப்பிடத்தக்கதாகும்.