தூத்துக்குடி முள்ளக்காடு காந்திநகரைச் சேர்ந்த சுவிசேஷமுத்து (வயது 42) என்பவர், முந்தைய காலங்களில் பிரியாணி கடை நடத்தி வந்தவர். நஷ்டம் காரணமாக தற்பொழுது டிரைவராக வேலை பார்த்து வந்த இவர், முத்துகனி என்ற மனைவியுடன் வாழ்ந்து வந்தார். இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 2ம் தேதி குடும்ப தகராறில் அவரது உறவினர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அவர் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் அவரது மனைவியின் தங்கை கணவர் மாசானமுத்து உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அந்த வழக்கில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குறையைத் தெரிவித்து, நேற்று இரவு காவல் நிலையம் வந்த சுவிசேஷமுத்து, “தன்னை தாக்கியவர்களை ஏன் கைது செய்யவில்லை?” என சப்-இன்ஸ்பெக்டரிடம் வாதப்பிரதிவில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அவர் கேனில் கொண்டு வந்த மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றி, காவல் நிலையம் முன்பு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

இதையடுத்து பலத்த காயங்களுடன் அவரை மீட்ட போலீசார் ஆம்புலன்ஸில் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வைத்தியர்களின் தீவிர சிகிச்சையும் பலனளிக்காத நிலையில், சுவிசேஷமுத்து இன்று காலை உயிரிழந்தார். இந்த சம்பவம் தூத்துக்குடி முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.