தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகே ஒரு கொடூரமான பழிகொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தட்டார்மடம் பகுதியில் குடும்ப தகராறு காரணமாக ஏற்கனவே கந்தையா என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசூரியன் (வயது 34), நேற்று நிபந்தனை ஜாமீனில் வெளியானார். இன்று காலை போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட சென்ற அவரை, மாலை விட்டு வரும்படி அதிகாரிகள் தெரிவித்தனர்.
பின்னர், தனது அண்ணன் சின்னத்துரையுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார். அவர்களது பயணம் மெஞ்ஞானபுரம் அருகே வேப்பங்காடு அந்தோனியார் கெபி பகுதியில் நிகழ்ந்த திடீர் தாக்குதலில் முடிந்தது. அந்த பகுதியில் முன்கூட்டியே திட்டமிட்டிருந்த கும்பல், காரில் வந்து சிவசூரியன் பைக்கை மோதிவிட்டது. உயிர்தப்ப ஓடிய இருவரையும் துரத்திச் சென்ற கும்பல், சிவசூரியனை தோட்டத்திற்குள் வழிமறித்து சரமாரியாக வெட்டிக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றது.
அவரது உடல் மீட்கப்பட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. அவரது அண்ணன் சின்னத்துரை காயமுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான், சாத்தான்குளம் டிஎஸ்பி ஆவுடையப்பன் உள்ளிட்ட உயரதிகாரிகள் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இது பழிவாங்கும் வகையில் திட்டமிட்ட கொலை எனவும், கந்தையாவின் உறவினர்கள் இந்த தாக்குதலுக்கு காரணமாக இருக்கலாம் எனவும் தெரிய வந்துள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க விரிவான வலைவீச்சு நடைபெற்று வருகிறது.
