இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் அஸ்வின். இவர் சிறந்த சுழற் பந்துவீச்சாளர். டிசம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த நிலையில் கிரிக்கெட் வீரர் அஸ்வின் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட அவர் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார். மேடையில் பேசிய அஸ்வின் கூறியதாவது, தமிழை தாய்மொழியாக கொண்ட மாணவர்கள் யார்? என அங்கிருந்த மாணவர்களிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு மாணவர்கள் அனைவரும் கையை தூக்கி உற்சாகமாக சத்தமிட்டனர். இதனைத் தொடர்ந்து ஹிந்தி மொழியை தாய்மொழியாக கொண்ட மாணவர்கள் யாராவது இருக்கிறீர்களா? என கேள்வி எழுப்பினார் அப்போது எந்த சத்தமும் வரவில்லை.
இதன்பின் சத்தம் வரவில்லையே “ஹிந்தி மொழி நமது தேசிய மொழி அல்ல. ஆனால் அதிகாரப்பூர்வ மொழி” என சொல்லலாம் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்,”என்னிடம் யாராவது உன்னால் முடியாது என்று சொன்னால் நான் எழுந்து கொள்வேன். உன்னால் முடியும் என்று சொன்னால் நான் தூங்கி விடுவேன். பலரும் என்னிடம் இந்திய அணியின் கேப்டனாக ஆவேன் என சொன்னதால்தான் நான் கேப்டன் ஆகாமல் இருந்துவிட்டேன். நீங்கள் அனைவரும் மாணவராக இருக்கும் வரை தான் கல்வி பயணம் தொடரும். மாணவராக இல்லையெனில் கல்விப் பயணம் நின்றுவிடும். எனவே நீங்கள் அனைவரும் வாழ்க்கை முழுவதும் ஒரு மாணவராகவே வாழ வேண்டும். என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.