தந்தை பெரியாரை கொச்சைப்படுத்தி பேசியதாக சீமானை கண்டித்து காங்கிரஸ் நிர்வாகியான செல்வப் பெருந்தகை தனது இணையதள பக்கத்தில் கூறியதாவது, தமிழக மக்களுக்கு தனது வாழ்நாளின் இறுதி கட்டம் வரை உழைத்தவர் தந்தை பெரியார். சமூக நீதி, பகுத்தறிவு, பெண் சுதந்திரம் என தமிழக மக்களுக்கு ஒவ்வொரு உரிமைகளையும் பெற்று தந்த மிகப்பெரிய மேதை. ஆனால் இவ்வளவு மலிவான சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி ஊடகப் வெளிச்சம் பெற்று வரும் சீமான் தந்தை பெரியாரை கொச்சைப்படுத்தி பேசியது குறித்து வன்மையாக கண்டிக்கிறேன்.

தந்தை பெரியார் கூறியதாக அவர் கூறும் கருத்துக்களை விடுதலை நாளேடு உள்ளிட்ட எதையாவது ஒரு ஆதாரத்தை காட்ட முடியுமா?. தமிழக மக்களுக்கு ஆண்டு ஆண்டாக மறுக்கப்பட்ட நீதியைப் பெற்றுத் தந்தவர் தந்தை பெரியார். அவரது போராட்டங்கள் அவரது தியாகங்கள் குறித்து தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும். மறுக்கப்பட்ட உரிமைகளை பெற்றுத்தந்த தந்தை பெரியாரை தமிழக மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.

தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி தமிழக மக்களிடையே ஊடக வெளிச்சம் பெற விரும்பும் சீமானை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழக இளைஞர்களை தவறாக வழிநடத்தி செல்லும் சீமானின் அரசியல் முடிவு காலம் நெருங்கிவிட்டது. தமிழகத்தின் சிறந்த நகைச்சுவை நடிகராக சீமான் மாறிவிட்டார். அவரை ஒரு பொருட்டாகவே தமிழக மக்கள் கருதுவதில்லை. தந்தை பெரியாரின் புகழை, எள் முனை அளவு கூட இவரைப் போன்றவர்கள் கெடுக்க முடியாது. என செல்வப் பெருந்தகை சீமானின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு கன்னடம் தெரிவித்துள்ளார்.