தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்று மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் இன்று முதல் மார்ச் 29-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு தமிழகத்தில் தென்காசி, திருச்சி, கரூர், ராணிப்பேட்டை, நாமக்கல், ஈரோடு, நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை போன்ற 17 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து மார்ச் 26, 27, 28, 29 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக்கூடும்.