காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி நாடாளுமன்ற மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ராகுல் காந்தியை நாடாளுமன்ற மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்த பாசிச நடவடிக்கைக்கு என்னுடைய கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். அகில இந்திய கட்சியின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு நாடாளுமன்றத்தில் கருத்து சொல்லும் ஜனநாயக உரிமை கூட கிடையாது என்பது மிரட்டும் தோணியில் இருக்கிறது. தீர்ப்பு வழங்கிய நீதிபதியே 30 மாதங்கள் தீர்ப்பை செயல்படுத்துவதற்கு கால அவகாசம் வழங்கி மேல்முறையீடு செய்ய அனுமதி கொடுத்துள்ளார்.

இன்னும் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் இருக்கிறது. ஆனால் அவசரமாக ராகுல் காந்தியை நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்துள்ளனர். ராகுல் காந்தி கேட்ட கேள்விகளுக்கு இதுவரை ஒன்றிய அரசு பதில் சொல்லவில்லை. இனியும் நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியை அனுமதித்தால் தங்கள் அரசியலுக்கு சிக்கலாகிவிடும் என்பதால் தான் அவரை தகுதி நீக்கம் செய்துள்ளனர். இதிலிருந்தே ராகுல் காந்தியை பார்த்து மத்தியில் ஆளும் பாஜக அரசு எந்த அளவுக்கு பயந்திருக்கிறது என்பது தெரிகிறது. மேலும் இதை எதிர்த்து இந்திய அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என முதல்வர் கூறியுள்ளார்.