பாமகவில் தந்தை டாக்டர் ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி ராமதாஸ் இடையே ஏற்பட்டுள்ள மோதலுக்கு அக்கட்சியின் மூத்த தலைவர் ஜி.கே. மணிதான் காரணம் என வழக்கறிஞர் பாலு பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
அரியலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “திமுக கொடுத்த வேலையைத்தான் ஜி.கே. மணி கச்சிதமாகச் செய்து வருகிறார்; இதற்காக அவருக்கு திமுகவிடமிருந்து சன்மானமும் கிடைத்து வருகிறது” எனச் சீறினார்.
தந்தைக்கும் மகனுக்கும் இடையில் பிரச்சனையைத் தூண்டிவிட்டு, இப்போது குடும்ப உறவையே சீர்குலைக்கும் வகையில் அவர் நாடகமாடுவதாகப் பாலு சாடினார்.
சமீபத்தில் டாக்டர் ராமதாஸ் தரப்பு நாளிதழ்களில் வெளியிட்ட விளம்பரம் குறித்துப் பேசிய பாலு, “கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காகத் தங்களை யாரும் வந்து பார்க்கவில்லை என்ற ஆதங்கத்தில்தான், முரணான தகவல்களுடன் இந்த விளம்பரத்தைக் கொடுத்துள்ளனர்” என எள்ளி நகையாடினார்.
மேலும், தேர்தல் ஆணையம் அங்கீகரித்த தலைவராக அன்புமணி ராமதாஸ் மட்டுமே நீடிக்கிறார் என்றும், அவர் கூட்டாத எந்தப் பொதுக்குழு கூட்டமும் செல்லாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
கட்சி விதிகளை மீறியதற்காக ஜி.கே. மணிக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள நிலையில், பாமகவின் இந்த உட்கட்சி மோதல் தமிழக அரசியலில் பெரும் அனலைக் கிளப்பியுள்ளது.
