தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவருமான விஜய் அவர்கள் 3 நாள் அரசு முறை பயணமாகத் தலைநகர் டெல்லிக்குச் சென்றுள்ள நிலையில், அவரது அடுத்தகட்டப் பயணத் திட்டம் குறித்த அதிரடியான புதிய தகவல் வெளியாகியுள்ளது. இன்று (ஜூன் 10) மாலை 4 மணிக்கு டெல்லி ராஷ்டிரபதி பவனில் இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களை நேரில் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தவுள்ள முதலமைச்சர் விஜய், அதனைத் தொடர்ந்து குடியரசுத் துணைத் தலைவரையும் சந்திக்க உள்ளார்.

இந்த டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு, வருகிற ஜூன் 12-ஆம் தேதி அவர் நேரடியாகக் கர்நாடக மாநிலத்திற்குப் பயணம் மேற்கொள்ள உள்ளதாகக் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ​அதன்படி, ஜூன் 12 அன்று டெல்லியிலிருந்து விமானம் மூலம் கர்நாடகாவின் மங்களூருக்குச் செல்லும் முதலமைச்சர் விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாக உடுப்பியில் உள்ள உலகப் புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்குச் செல்லவுள்ளார். அங்கு மூகாம்பிகை அம்மன் சன்னதியில் அவர் சிறப்புச் சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தவிருப்பதாகத் நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு விஜய் மேற்கொள்ளும் மிக முக்கியமான ஆன்மீகப் பயணம் இது என்பதால், உடுப்பி மற்றும் மங்களூர் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் இப்போதே தீவிரமாகத் தொடங்கப்பட்டுள்ளன. டெல்லி அரசியல் சந்திப்புகளைத் தொடர்ந்து கர்நாடகாவில் சாமி தரிசனம் செய்யவிருக்கும் முதலமைச்சரின் இந்த அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள் தொண்டர்கள் மத்தியிலும் அரசியல் களத்திலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.