மேற்கு வங்காளத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சியில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் ராஜினாமாக்கள் தேசிய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. ஏற்கனவே அக்கட்சியின் மூத்த எம்பி சுகேந்து சேகர் ராய் ராஜினாமா செய்திருந்த நிலையில், தற்போது ராஜ்யசபா எம்பி சுஷ்மிதா தேவ் தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார்.

அதுமட்டுமன்றி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தான் முழுமையாக விலகுவதாகவும் அவர் அறிவித்துள்ளது, மேற்கு வங்கத்தில் ஆட்சியை இழந்து தவிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் தலைமைக்கு மிகப்பெரிய அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கட்சியில் இருந்து விலகிய கையோடு, சுஷ்மிதா தேவ் அசாம் மாநில முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஹிமந்த பிஸ்வா சர்மாவை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் சுவேந்து அதிகாரி தலைமையில் பாஜக புதிய ஆட்சியை அமைத்துள்ள சூழலில், இந்த அதிரடி சந்திப்பானது சுஷ்மிதா தேவும் விரைவில் பாரதிய ஜனதா கட்சியில் (BJP) இணையப் போகிறார் என்ற அரசியல் யூகங்களை நாடு முழுவதும் பலமாக எழுப்பியுள்ளது. அசாம் மற்றும் வடகிழக்கு அரசியல் களத்தில் வலுவான செல்வாக்கு கொண்ட சுஷ்மிதா தேவின் இந்த திடீர் விலகல், திரிணாமுல் காங்கிரஸின் தேசிய அளவிலான அரசியல் நகர்வுகளுக்குப் பலத்த பின்னடைவாகக் கருதப்படுகிறது.