கேரளாவில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு, பெண்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணத்தை வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது. முதல்வர் வி.டி. சதீசன் தலைமையில் நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.

மேலும் தேர்தல் பிரச்சாரத்தின்போது அளிக்கப்பட்ட முக்கிய ஐந்து ‘இந்திரா உத்தரவாதங்களில்’ ஒன்றான இத்திட்டத்திற்கு ‘பிரியதர்சினி திட்டம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. வரும் ஜூன் 15-ம் தேதி முதல் இத்திட்டம் அதிகாரப்பூர்வமாக மாநிலம் முழுவதும் அமலுக்கு வருகிறது.

இதன் மூலம் கேரளா அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சாதாரணக் கட்டணப் பேருந்துகளில் அனைத்து வயது மற்றும் அனைத்துப் பொருளாதாரப் பின்னணியைச் சேர்ந்த பெண்களும், மாற்றுப்பாலினத்தவர்களும் முற்றிலும் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முதல் கட்டமாக இந்த இலவசப் பயணச் சலுகை சாதாரணப் பேருந்துகளுக்கு மட்டுமே பொருந்தும் என அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இத்திட்டத்தின் செயல்பாட்டை முதல் 100 நாட்களுக்குக் கண்காணித்து, பயணிகளின் தரவுகளை ஆய்வு செய்த பிறகு, அதிவேக மற்றும் அதிவிரைவுப் பேருந்துகளுக்கும் இதை நீட்டிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தினால் போக்குவரத்துக் கழகத்திற்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட, ஆண்டுக்கு சுமார் ₹800 கோடி கூடுதல் நிதியை மாநில அரசே நேரடியாக வழங்கும் என்றும் முதல்வர் சதீசன் உறுதியளித்துள்ளார். பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை மேம்படுத்தவும், வரவேற்பைப் பெற்றுள்ளது.