கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி, தமிழக அமைச்சரவையில் முக்கியப் பொறுப்பில் உள்ள அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் மற்றும் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்குகளில், அமலாக்கத்துறையின் விசாரணையின்படி அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் மனைவி டெய்சி மற்றும் அவரது மாமியாரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான லீமா ரோஸ் மார்ட்டின் ஆகியோருக்குத் தொடர்பு இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

கேரளா நீதிமன்றங்களில் இதுதொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இத்தகைய கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளவர்களின் பின்னணியைக் கொண்டுள்ள ஆதவ் அர்ஜுனா தொடர்ந்து அமைச்சரவையில் நீடிப்பது முறையல்ல என்று அவர் சுட்டிக்காட்டினார். மேலும், தமிழக முதல்வர் விஜய் ‘ஊழலற்ற தூய்மையான ஆட்சி’ மற்றும் ‘போதைப்பொருள் இல்லாத மாநிலம்’ என்ற வாக்குறுதிகளோடு ஆட்சியை நடத்தி வரும் வேளையில், அவரது அமைச்சரவையில் உள்ள முக்கிய அமைச்சரின் குடும்பத்தினர் மீதே சர்வதேச அளவிலான போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பது அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என்றும் கிருஷ்ணசாமி எச்சரித்துள்ளார்.

லீமா ரோஸுக்குச் சொந்தமான ரூ.5 ஆயிரம் கோடி அளவிலான சொத்துக்கள் மற்றும் கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட நிதியின் பின்னணி குறித்தும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் கோரியுள்ளார். எனவே, இந்த விவகாரத்தில் முதல்வர் விஜய் மௌனம் காக்காமல், சம்பந்தப்பட்டவர்கள் தங்களின் நிரபராதித் தன்மையை நிரூபிக்கும் வரை ஆதவ் அர்ஜுனாவை அமைச்சர் பதவியில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் உடனடியாக நீக்கி வைக்க வேண்டும் என்றும், அ.தி.மு.க-வில் அண்மையில் இணைந்த லீமா ரோஸை அக்கட்சியும் நீக்க வேண்டும் என்றும் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.