பொது விநியோகத் திட்டத்தின் பயன்களைப் பொதுமக்கள் எளிதில் பெறும் வகையில், தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மாதந்தோறும் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நடப்பு ஜூன் (2026) மாதத்திற்கான மாதாந்திர ரேஷன் குறைதீர் முகாம், சென்னையில் உள்ள உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் வரும் 13.06.2026 (சனிக்கிழமை) அன்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் குடும்ப அட்டைகளில் புதிய பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் கைபேசி எண் பதிவு அல்லது மாற்றம் செய்தல் உள்ளிட்ட விபரங்களை மேற்கொள்ளலாம். மேலும், நியாயவிலைக் கடைகளுக்கு நேரில் வர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு, மற்றவர்கள் மூலம் பொருட்களைப் பெற்றுக் கொள்ள ஏதுவாக ‘அங்கீகார சான்று’ வழங்கும் சேவைகளும் இந்த முகாமில் செய்து தரப்படும்.
இதுமட்டுமின்றி, பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தரம் மற்றும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் உள்ள குறைபாடுகள் குறித்த புகார்களைப் பொதுமக்கள் இந்த முகாமில் தெரிவித்தால், அவற்றிற்கு விரைந்து தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த முகாமில் வழங்கப்படும் பெரும்பாலான சேவைகள், குடும்ப அட்டையுடன் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு வரும் ஒருமுறை கடவுச்சொல் (OTP) வழியாகவே மேற்கொள்ளப்படும். எனவே, பொதுமக்கள் தங்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசியுடன் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்கள் இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களின் குறைகளைத் தீர்த்துக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
