சென்னை மாநகரம் முழுவதும் சமீபகாலமாக ஏற்படும் மின் தடைகளைக் கண்காணித்து, மின் விநியோகத்தை உடனுக்குடன் சீரமைக்கும் பணிகளை ஒருங்கிணைக்க 10 புதிய சிறப்புக் குழுக்களைத் தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. கோடைக்காலம் மற்றும் பராமரிப்புப் பணிகளால் ஆங்காங்கே ஏற்படும் மின்வெட்டுப் பிரச்சினைகளுக்குத் துரித தீர்வுகாணும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்குழுக்கள் சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யத் தீவிரமாகப் பணியாற்றவுள்ளன.
பெரிய அளவிலான மின் பழுதுகள் குறித்த தகவல்களை உடனுக்குடன் பெறுதல், ‘மின்னகம்’ மற்றும் மின்வாரிய புகார் மையங்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களை விரிவாக ஆய்வு செய்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பணிகளை இச்சிறப்புக் குழுக்கள் மேற்கொள்ள உள்ளன. மின் தடையால் பொதுமக்கள் சந்திக்கும் சிரமங்களைக் குறைக்கவும், பழுதுகளைத் தாமதமின்றி போர்க்கால அடிப்படையில் சரி செய்யவும் இந்த புதிய குழுக்களின் செயல்பாடுகள் பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தமிழக வெற்றிக்கழக அரசு பொறுப்பேற்றது முதலே தொடர்ந்து மின்வெட்டு பிரச்சனை குறித்த புகார்கள் வந்து கொண்டே இருக்கும் நிலையில் பல இடங்களில் போராட்டங்களும் நடைபெறுகிறது. இது தொடர்பாக அமைச்சர் நிர்மல் குமார் கூறும் போது பியூஸ் கேரியர் திருட்டு உள்ளிட்ட தனிப்பட்ட நபர்களின் தவறுகள் நடப்பதாக கூறியிருந்தார். அதேபோன்று பியூஸ் கேரியர்களை திருடி செல்லும் வீடியோ கூட வெளியானது. மேலும் இது தொடர்பான விசாரணை ஒருபுறம் நடந்து கொண்டிருக்க தற்போது தமிழக அரசு மின்வெட்டு பிரச்சனையை சரி செய்ய முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது.
