தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் இரண்டாவது முறையாக டெல்லிக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய், அங்குப் பல்வேறு முக்கியத் தலைவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். தனது மூன்று நாள் பயணத்தின் முதல் நாளான இன்று, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் மாளிகையில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து, குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனையும் அவர் நேரில் சந்தித்துப் பேசினார். இந்த அதிகாரப்பூர்வ சந்திப்புகளுக்குப் பிறகு, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆகியோரை சோனியா காந்தியின் இல்லத்தில் முதல்வர் விஜய் சந்தித்தார். மேலும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவையும் அவர் நேரில் சந்தித்துப் பேசினார்.

கடந்த மே 27 அன்று முதலமைச்சர் விஜய் டெல்லி சென்றிருந்த போது, நேரமின்மை காரணமாகக் காங்கிரஸ் தலைவர்களைச் சந்திக்க முடியாமல் போன நிலையில், இந்த முறை இந்த முக்கிய சந்திப்பு வெற்றிகரமாக நிகழ்ந்துள்ளது. 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த ஆலோசனையின் போது தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரம், கூட்டணித் தொடர்ச்சி மற்றும் மாநில வளர்ச்சித் திட்டங்கள் குறித்துப் பேசப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளை நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் முக்கிய கோரிக்கைகள் குறித்து முதல்வர் விஜய் உரையாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.