தமிழக பா.ஜ.க-வின் மாநிலத் தலைவராகப் பணியாற்றி, சமீபத்தில் அப் பதவியிலிருந்து விலகிய முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி கே.அண்ணாமலை, “வி தி லீடர்ஸ்” (We the Leaders) என்ற புதிய மக்கள் இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். இந்த இயக்கம் தொடங்கப்பட்ட சில தினங்களிலேயே லட்சக்கணக்கானோர் இதில் இணைந்து வரும் நிலையில், தமிழக பா.ஜ.க-வில் அடுத்தடுத்த முக்கிய விக்கெட்டுகள் சரிந்து வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரும், பா.ஜ.க மாநிலச் செயலாளருமான அமர் பிரசாத் ரெட்டி, கட்சியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “தி.மு.க ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாக நாம் விமர்சிக்கிறோம்; ஆனால், தமிழக பா.ஜ.க-வும் வெறும் 4 அல்லது 5 நபர்களின் சுயநலக் கட்டுப்பாட்டில்தான் இயங்கி வருகிறது” என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
Important Announcement
I have resigned from the @BJP4India and will be joining Thalaivar @annamalai_k avargal in his journey ahead. pic.twitter.com/RvmMamPt5E
— APR (@amarprasadreddy) June 10, 2026
மேலும், தேர்தலில் மீண்டும் மீண்டும் தோல்வியடைந்தாலும், அவர்களே மீண்டும் சீட் பெற்று போட்டியிட வேண்டும் என்று நினைப்பதாகத் தற்போதைய பா.ஜ.க தலைமை மீது அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார். பிறப்பால் தான் ஒரு தெலுங்கர் என்றாலும், தமிழுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் தொடர்ந்து களத்தில் நிற்பேன் என்று கூறியுள்ள அமர் பிரசாத் ரெட்டி, விரைவில் அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் அதிகாரப்பூர்வமாக இணைய உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், “தமிழகத்தின் எதிர்கால அரசியல் களம் என்பது அண்ணாமலைக்கும், தமிழக முதல்வர் விஜய்க்கும் இடையிலான போட்டியாகத்தான் இருக்கும்” என்று அவர் கணித்துக் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பா.ஜ.க துணைத் தலைவர் கரு நாகராஜன் உட்பட 15-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் விலகியதைத் தொடர்ந்து, அமர் பிரசாத் ரெட்டியின் இந்த வெளியேற்றம் பா.ஜ.க தலைமைக்கு விழுந்த அடுத்த பலத்த அடியாகப் பார்க்கப்படுகிறது.
