வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் காணொளி ஒன்று ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த காணொளியில் ஒரு நபர், “ஒருமுறை ஓட்டு போடுவதால் என்ன ஆகிவிடப் போகிறது? பிடிக்கவில்லை என்றால் அடுத்த தேர்தலில் மாற்றிக்கொள்ளப் போகிறோம்” என்று கேட்கிறார். அதற்குப் பதிலளிக்கும் மற்றொரு நபர், “ஒரு ஓட்டு எனக்கு மிக முக்கியம், உங்களுக்கு வேண்டுமானால் முக்கியமில்லாமல் இருக்கலாம். முதல் ஓட்டை நீங்கள் விளையாட்டாகப் போடலாம், ஆனால் எனக்கு அப்படி இல்லை. நான் எனது உரிமையை இழந்து, உடமையை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து இங்கு வாழ்வதே இக்கட்டான சூழல் என்ற இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறேன்.

இந்தியா போன்ற பலதரப்பட்ட மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்திருக்க வேண்டிய இடத்தில், இன்று கிறித்தவர், முஸ்லிம், இந்து எனப் பிரித்துப் பார்க்கப்படுகிறார்கள். எல்லா மசூதிகளுக்குள்ளும் லிங்கம் இருக்கிறதா என்று தேடிப் பார்த்து இடிக்கிறார்கள். முஸ்லிம் பெயரோ அல்லது அடையாளம் காட்டும் தாடியோ வைத்திருந்தால் விரட்டி விரட்டிச் சுடுகிறார்கள். காப்பாற்ற வேண்டிய காவல்துறையே துப்பாக்கி எடுத்துச் சுடுகிறது. நான் ஒரு முஸ்லிம் என்ற காரணத்தால், நான் ஓட்டி வரும் வண்டியை எரிக்கிறான்; என் குடும்பத்தையே அழிக்கிறான்” என்று பேசுகிறார்.

​அவர் மேலும் கூறுகையில், “நான் இந்த மதத்தைச் சார்ந்தவன், இந்த இனத்தைச் சார்ந்தவன் என்பதால் என் மீது வன்மையான வார்த்தைகள் வீசப்படுகின்றன. இவ்வளவு காலம் என்னுடன் பழகிக் கொண்டிருந்த சமூகமே எனக்கு எதிரான ஒரு மனநிலைக்கு மாற்றப்படுகிறது. இது ஒரு முஸ்லிமுக்கும் நடக்கிறது, கிறித்தவருக்கும் நடக்கிறது. நான் போடாத ஒரு ஓட்டை, நான் போட்ட ஓட்டாக நினைத்து மோடி அதிகாரத்திற்கு வந்திருக்கிறார். இதெல்லாம் எனக்கு முன்னால் இருக்கும் பிரதானமான பிரச்சினைகள். இந்தப் பிரச்சினைகளை யோசித்துத்தான் நான் ஓட்டு போட முடியும்.

உங்களைப் போல வந்தவர்களுக்கு எல்லாம் வாய்ப்பு கொடுப்போம் என்ற இடத்திற்கு நான் வரவில்லை. இந்தப் ‘பிரிவிலேஜ்’ (Privilege) வாழ்க்கை என் வாழ்க்கை இல்லை. நீங்கள் உங்கள் தந்தையின் பணத்தில் வாழ்கிறீர்கள். நீங்கள் விஜய் படம் பார்க்கச் செல்வது கூட உங்கள் சொந்தப் பணத்தில் இல்லை, உங்கள் பெற்றோர் பணமாகத்தான் இருக்கும். அதனால்தான் ஓட்டைச் சும்மா போடலாம் என்று நினைக்கிறீர்கள். உங்களைக் குறைத்து மதிப்பிடவில்லை, அந்த வயதில் உங்களுக்கு அப்படித்தான் தோன்றும், அதில் தப்பில்லை” என்று மிகத் தெளிவாகப் பேசியுள்ளார். இந்தத் தனித்துவமான உரையாடல் தற்போது ‘எக்ஸ்’ தளத்தில் வைரலாகி வருகிறது.