சாதிக்கத் துடிப்பவர்களுக்குத் தடையாக இருப்பது பயம் மட்டுமே, அதை வென்றால் வானமே எல்லை என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறார் ஐபிஎஸ் (IPS) திரிப்தி பட். ஆசிரிய குடும்பத்தில் பிறந்த இவர், தனது 9-ஆம் வகுப்பில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றார்.
அப்போது கலாம் அவருக்குக் கையால் எழுதி கொடுத்த ஊக்கமளிக்கும் கடிதம், திரிப்தியின் வாழ்க்கையையே மாற்றியது. பொறியியல் படிப்பை முடித்த அவருக்கு என்டிபிசி (NTPC)-யில் மேலாளர் வேலை கிடைத்தது. ஆனால், தனது லட்சியமான யூபிஎஸ்சி (UPSC) தேர்வை நோக்கி நகரத் தொடங்கிய அவர், இஸ்ரோ (ISRO) உள்ளிட்ட 16 உயரிய அரசுப் பணிகளைத் துணிச்சலாகத் தூக்கியெறிந்தார்.
எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் கடந்து, தான் நினைத்த ஐபிஎஸ் பதவியை அடைய வேண்டும் என்பதில் திரிப்தி உறுதியாக இருந்தார். “அரசு வேலை கிடைப்பதே குதிரைக்கொம்பு” எனச் சொல்லப்படும் காலத்தில், 16 வேலைகளைத் தியாகம் செய்துவிட்டுத் தேர்வுக்குத் தயாரான இவரின் அர்ப்பணிப்பு வீண் போகவில்லை.
முதல் முயற்சியிலேயே யூபிஎஸ்சி தேர்வை வென்று காட்டி, இன்று பல இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார். “உயர்ந்த கனவுகளைக் காணுங்கள், உங்களை நீங்களே நம்புங்கள்” என்ற தாரக மந்திரத்தோடு திரிப்தி பட் படைத்த இந்தச் சாதனை, தற்போது சமூக வலைதளங்களில் பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
