டெல்லி – லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த கணக்காளர் ஒருவரிடம், பட்டப்பகலில் 85 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நொய்டாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் கணக்காளராகப் பணிபுரியும் அந்த நபர், பணத்தை வசூல் செய்துகொண்டு ஹாப்பூர் வழியாகத் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது அவரைப் பின்தொடர்ந்து பைக்கில் வந்த இரண்டு கொள்ளையர்கள், ஸ்கூட்டரை எட்டி உதைத்து அவரை கீழே தள்ளியுள்ளனர். அவர் நிலைகுலைந்து கீழே விழுந்த நேரத்தில், கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் வைத்திருந்த 85 லட்சம் ரூபாய் அடங்கிய பையை பறித்துக்கொண்டு தப்பினர்.

இந்தத் துணிகரக் கொள்ளைச் சம்பவம் அருகில் இருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் அப்படியே பதிவாகியுள்ளது. அந்த வீடியோவில், கொள்ளையர்களுக்கு உதவியாக கார் ஒன்றும் வந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இந்த வீடியோவை வைத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள கொள்ளையர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள போலீஸார், அவர்களைப் பிடித்துத் தருபவர்களுக்குத் தலைக்கு 50,000 ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளனர்.

மக்கள் நடமாட்டம் மிகுந்த நெடுஞ்சாலையில் நடந்த இந்தச் சம்பவம் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.