திருப்பூரில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், வரும் 2026 தேர்தல் குறித்து அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

“நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர்; எங்களின் எழுச்சியைக் கட்டுப்படுத்த யாராலும் முடியாது” என அவர் ஆவேசமாகப் பேசினார்.

234 தொகுதிகளிலும் தவெக அமோக வெற்றி பெறும் என்றும், மே மாதத்திற்குப் பிறகு தமிழகம் ஒட்டுமொத்த இந்தியாவிற்கே வழிகாட்டியாக மாறும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோருடன் பணியாற்றிய அனுபவத்தை நினைவுகூர்ந்த செங்கோட்டையன், “மூன்றாவது பெரும் தலைவரான விஜய்யுடன் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

மக்கள் இப்போது தேர்தல் தேதிக்காகவும், சின்னத்திற்காகவும் காத்திருப்பதாகவும், மற்ற கட்சிகளைப் போல வாக்குக் கேட்டுத் தேடி அலைய வேண்டிய அவசியம் தவெக-வுக்கு இல்லை என்றும் அவர் கூறினார்.

“விமானம் நேரடியாகத் தரையிறங்குவது போல, தவெக நேரடியாகக் கோட்டைக்குச் செல்லும் இயக்கமாக இருக்கும்” என அவர் பேசியது தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.