சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயாராகி வரும் வேளையில், கட்சிக்குள் நடக்கும் உள்கட்சி பூசல்களைக் களைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
அந்த வகையில், வடசென்னை மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான லண்டன் வெங்கடேஷ், விசுவாசி மற்றும் கலையரசு ஆகிய 3 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
கட்சி விதிகளை மீறி, தலைமைக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீக்கப்பட்ட இந்த மூன்று நிர்வாகிகளுடனும் அதிமுகவினர் யாரும் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளார்.
“கட்டுக்கோப்பைச் குலைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கருணை காட்டப்படாது” என்ற செய்தியை இந்த நீக்கத்தின் மூலம் மற்ற நிர்வாகிகளுக்கு இபிஎஸ் உணர்த்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
வடசென்னை பகுதியில் செல்வாக்குள்ள இந்த நிர்வாகிகள் நீக்கப்பட்டது, அந்த மாவட்ட அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
