முன்னாள் இந்திய கிரிக்கெட் நட்சத்திரமும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் லெஜண்டுமான ‘சின்ன தல’ சுரேஷ் ரெய்னா, இந்தூர் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற தனித்துவமான ‘சனாதன் பிரீமியர் லீக்’ (SPL) டி20 தொடரில் களம் இறங்கி ரசிகர்களுக்கு பழைய நினைவுகளைக் கிளறியுள்ளார். சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்பட்ட இந்தத் தொடர், வழக்கமான கிரிக்கெட் போட்டிகள் போல் அல்லாமல், முழுக்க முழுக்க இந்து கலாச்சாரத்தை மையமாகக் கொண்டு நடத்தப்பட்டது.
இந்த நள்ளிரவுப் போட்டியில் நவீன விளையாட்டு உடையில் ரெய்னா பேட்டிங் செய்ய, அவருக்கு எதிராகப் போட்டியிட்ட ஆன்மீகத் தலைவர்கள் மற்றும் பிற வீரர்கள் பாரம்பரிய வேட்டி மற்றும் குர்தா அணிந்து விளையாடினர். கவ்பாய் தொப்பி அணிந்த நடுவர் ஒருபுறம், வேட்டி கட்டிய வீரர்கள் மறுபுறம் என மைதானமே ஒரு திருவிழா கோலமாகக் காட்சியளித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றன.
Suresh Raina playing in Sanatan Premier League 😭😭 pic.twitter.com/bDnUl07o3o
— Abhinav MSDian™ (@Abhinav_hariom) June 10, 2026
சனாதன் நியாஸ் அறக்கட்டளையின் வழிகாட்டுதலின் கீழ், பிரபல ஆன்மீகத் தலைவர் தேவ்கினந்தன் தாக்கூர் ஜி மகராஜ் என்பவரால் இந்த லீக் உருவாக்கப்பட்டுள்ளது. நவீன பொழுதுபோக்குடன் நமது கலாச்சார வேர்களையும், சமூக சேவையையும் இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். வெறும் கோப்பைக்காக மட்டுமின்றி, சமூக நலனுக்கான நிதி திரட்டும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த 2026-ஆம் ஆண்டு தொடரின் மூலம், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ₹2,50,000 மறுவாழ்வு உதவித்தொகை, தியாகிகளின் குடும்பங்களுக்கான நிதி மற்றும் அரிய வகை நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ உதவி எனப் பல்வேறு நற்பணிகள் செய்யப்படவுள்ளன.
விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் ஏஎம்ஜி மத்திய பிரதேச அணியை வீழ்த்தி எம்பிஆர் ராஜஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இத்தொடரில் சுரேஷ் ரெய்னாவுடன் பியூஷ் சாவ்லா, உமேஷ் யாதவ் போன்ற கிரிக்கெட் வீரர்களும், ‘ராமாயணம்’ தொடரில் ராமனாக நடித்த அருண் கோவில் போன்ற கலாச்சார பிரபலங்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
