குஜராத் மாநிலம் வல்சாத் நகரின் திதால் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 22 வயதான மானவ் படேல் என்ற டெலிவரி ஊழியர் 13-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இவரது தந்தை காலமானதை அடுத்து, தனது விதவைத் தாய் மற்றும் தங்கையைக் காப்பாற்றும் முழு குடும்பப் பொறுப்பும் வாலிபர் மானவ் படேல் மீதே விழுந்துள்ளது.
குடும்பத்தைக் பொருளாதார ரீதியாகக் கரைசேர்ப்பதற்காக அவர் காலை முதல் நள்ளிரவு வரை ஓயாமல் கடுமையாக உழைத்து வந்துள்ளார். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மதியம் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு டெலிவரி செய்யச் சென்ற மானவ், எதிர்பாராதவிதமாக அங்கிருந்து கீழே குதித்துள்ளார். பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
🚨SHOCKING | Delivery worker dies by suicide after jumping from the 13th floor of a building in Gujarat due to severe financial stress pic.twitter.com/uqaHrVUqY1
— The Tatva (@thetatvaindia) June 10, 2026
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், மானவ் படேல் தற்கொலை செய்வதற்கு முன்பாக 13-வது மாடியின் வரவேற்புப் பகுதியில் நீண்ட நேரம் உலாவுவதும், தனது செல்போனைப் பார்த்துவிட்டு அங்குமிங்கும் பதற்றத்துடன் நடப்பதும் பதிவாகியுள்ளது. வறுமையின் காரணமாகவும், குடும்பப் பொறுப்பின் அழுத்தத்தாலும் அவர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் குடும்பத்தின் ஒரே வாழ்வாதாரமாக விளங்கிய மானவ் படேலின் திடீர் மரணம் அவரது தாயையும், தங்கையையும் நிலைகுலையச் செய்துள்ளது. இளம் தொழிலாளர்கள் சந்திக்கும் மன உளைச்சலையும், பொருளாதார நெருக்கடியையும் வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ள இச்சம்பவம் குறித்து போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
