பிரான்ஸ் நாட்டின் மிகப்பிரபலமான பாப் பாடகரும், நடிகருமான பேட்ரிக் ப்ரூயல் (67), பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டின் கீழ் பிரெஞ்சு போலீசாரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். பிரான்ஸ் பாப் கலாசாரத்தில் முக்கிய நபராக விளங்கும் இவர், ஏராளமான இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளதுடன் 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில், கடந்த 1997 முதல் 2012 வரையிலான காலகட்டங்களில் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் நாடுகளில் தங்களுக்குப் பாலியல் தொல்லை, பாலியல் வன்கொடுமை மற்றும் பலாத்கார முயற்சி செய்ததாக 13 பெண்கள் இவர் மீது பரபரப்பு புகார்களை அளித்துள்ளனர்.

இப்புகார்களின் அடிப்படையில் நான்டெர்ரே  நகர அரசு வழக்கறிஞர் அலுவலகம் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து, அவர் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.இந்த விவகாரத்தில் அண்மையில் மேலும் இரு பெண்கள் புதிய புகார்களை அளித்துள்ள நிலையில், பிரெஞ்சு அரசு வழக்கறிஞர்கள் பேட்ரிக் ப்ரூயல் மீது முறைப்படி வழக்குப்பதிவு செய்து, அவரை நீதிமன்றக் காவலில் வைக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே, தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் திட்டவட்டமாக மறுத்துள்ள பாடகர் பேட்ரிக், “நான் எந்தப் பெண்ணையும் ஒருபோதும் வற்புறுத்தியதோ அல்லது தவறாக நடத்தியதோ இல்லை” என்று சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சட்டப்பூர்வமான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி தனது நிரபராதித் தன்மையை நிரூபிக்கப் போவதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ள நிலையில், இந்தத் திடீர் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து இந்த மாத இறுதியில் பாரிஸில் தொடங்கவிருந்த அவரது பிரம்மாண்ட இசைப் பயண நிகழ்ச்சிகள்  பெரும்பாலானவை ரத்து செய்யப்பட்டுள்ளன. இச்சம்பவம் பிரான்ஸ் கலை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.