இந்தியாவின் டிஜிட்டல் புரட்சியான UPI (Unified Payments Interface), இனி உலக நாடுகளிலும் தடம் பதிக்கத் தயாராகி வருகிறது. இந்தியாவிற்கு வெளியே அதிக நாடுகளில் UPI வசதியைக் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக நிதிச் சேவைகள் துறைச் செயலாளர் நாகராஜு தெரிவித்துள்ளார். இதன் மூலம் வெளிநாடு செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகளும், அங்குள்ள மாணவர்களும் பணப் பரிமாற்றத்திற்காகக் கையில் ரொக்கத்தையோ அல்லது சர்வதேச கார்டுகளையோ எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. நமது ஊரில் பயன்படுத்துவது போலவே க்யூ-ஆர் (QR) கோடை ஸ்கேன் செய்து மிக எளிதாகப் பணத்தைச் செலுத்த முடியும்.

​தற்போது பூடான், சிங்கப்பூர், கத்தார், பிரான்ஸ் உள்ளிட்ட 8 நாடுகளில் ஏற்கனவே UPI வசதி பயன்பாட்டில் உள்ளது. இந்த எண்ணிக்கையை இன்னும் பல நாடுகளுக்கு விரிவுபடுத்துவதன் மூலம் இந்திய ரூபாய் மதிப்பு உலக அளவில் வலுப்பெறும் என்றும், டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா உலகிற்கே முன்னோடியாகத் திகழும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியத் தொழில்நுட்பத்தை உலகமே திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.