ஓடிசா மாநிலம் பலாங்கிர் மாவட்டத்தில், சிப்ஸ் பாக்கெட் வெடித்ததில் 8 வயது சிறுவன் தனது ஒரு கண்ணின் பார்வையை இழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. திங்கட்கிழமை மாலை டியூஷன் முடிந்து வீடு திரும்பிய அந்தச் சிறுவன், கடையில் வாங்கிய சிப்ஸ் பாக்கெட்டை கையில் வைத்துக்கொண்டு சமையலறைக்குச் சென்றுள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக அந்தப் பாக்கெட் எரியும் எரிவாயு அடுப்பின் மீது விழுந்ததில், அது ஒரு வெடிகுண்டு போலப் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த வெடிப்பின் வீச்சு சிறுவனின் முகத்தில் பலமாகத் தாக்கியதில் அவனது ஒரு கண் முழுமையாகப் பாதிக்கப்பட்டது.

​சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர், அவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், காயம் மிக ஆழமாக இருந்ததால் அவனது கண் பார்வையை மீண்டும் கொண்டு வர முடியாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். பிஸ்கட் வாங்கக் கொடுத்த காசில் சிப்ஸ் வாங்கி வந்த சிறுவனுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டதைக் கண்டு அவனது பெற்றோர் கதறித் துடித்தனர். சிப்ஸ் பாக்கெட்டில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் தீயில் பட்டவுடன் இப்படி வெடித்தது எப்படி என்று கேள்வி எழுப்பியுள்ள உறவினர்கள், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.