உணவு மற்றும் மளிகைப் பொருட்களை மின்னல் வேகத்தில் விநியோகம் செய்யும் ‘குயிக் காமர்ஸ்’ (Quick Commerce) நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடிவாளம் போட்டுள்ளது. கடந்த டிசம்பர் 25 மற்றும் 31 ஆகிய தேதிகளில் டெலிவரி ஊழியர்கள் நடத்திய நாடு தழுவிய போராட்டத்தைத் தொடர்ந்து, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இந்த விவகாரத்தில் அதிரடியாகத் தலையிட்டார். 10 நிமிடங்களில் டெலிவரி செய்ய வேண்டும் என்ற கட்டாயம் ஊழியர்களுக்கு மன அழுத்தத்தை உருவாக்குவதோடு, சாலைப் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து, அத்தகைய விளம்பரங்களை நீக்க அரசு உத்தரவிட்டது.

​இதனை ஏற்றுக்கொண்ட பிளிங்கிட் (Blinkit) நிறுவனம், தனது ’10 நிமிட டெலிவரி’ என்ற வாசகத்தை அனைத்துத் தளங்களிலிருந்தும் நீக்கியுள்ளது. அதற்குப் பதிலாக, “30,000-க்கும் மேற்பட்ட பொருட்கள் உங்கள் வீட்டு வாசலில்” என்ற புதிய வாசகத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. பிளிங்கிட்டைத் தொடர்ந்து ஸ்விக்கி (Swiggy), சோமாட்டோ (Zomato) மற்றும் ஜெப்டோ (Zepto) போன்ற நிறுவனங்களும் தங்களது செயலிகள் மற்றும் சமூக வலைதளங்களில் இருந்து இது போன்ற காலக்கெடு விளம்பரங்களை நீக்க உறுதியளித்துள்ளன. அரசின் இந்த நடவடிக்கை டெலிவரி ஊழியர்களின் பணிச் சுமையைக் குறைக்கும் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.