உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் அருகே உள்ள பௌடா கிராமத்தில், ஒன்பது வயது சிறுமி ரியா கௌதம் தெருநாய்கள் கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தாள்.

ஆக்ராவில் கூலி வேலை செய்யும் தனது தந்தை மூன்று மாதங்களுக்குப் பிறகு அன்று ஊருக்கு வருவதால், அவரைப் பார்ப்பதற்காக வயல்வெளியில் இருந்து ஆசையாக வீட்டிற்குத் தனியாக நடந்து சென்றபோது இந்தச் சோகம் நிகழ்ந்துள்ளது.

நாய்கள் சூழ்ந்து கடிப்பதைப் பார்த்த அவளது தாய் ஓடிச் சென்று காப்பாற்ற முயன்றார், ஆனால் நாய்கள் அவர் மீதும் பாயத் தொடங்கின. உறவினர் ஒருவரின் உதவியுடன்நாய்களை விரட்டிவிட்டு சிறுமியை மீட்டபோது, அவள் உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தாள்.

உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் சிகிச்சை பலனின்றி அந்தச் சிறுமி உயிரிழந்தாள்.

தந்தை வரும் மகிழ்ச்சியில் இருந்த அந்த வீடே தற்போது சோகத்தில் மூழ்கியுள்ளது. இறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்புதான் தனது தந்தையிடம் போனில் பேசிவிட்டு, அவர் வாங்கி வரும் பரிசுகளுக்காக ரியா காத்திருந்தாள்.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள்,உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு அரசு உதவி வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர்.

மேலும், அப்பகுதியில் அதிகரித்து வரும் தெருநாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.