பெங்களூருவில் உள்ள ஆக்ஸ்போர்டு பல் மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த 23 வயது மாணவி யஷஸ்வினி, கடந்த ஜனவரி 8-ம் தேதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த மாணவியின் நிறம் மற்றும் தோற்றத்தைக் குறித்து பேராசிரியர்கள் வகுப்பறையில் அடிக்கடி கேலி செய்ததாகவும், “கருப்பாக இருப்பவர்கள் எப்படி மருத்துவர் ஆக முடியும்?” என்பது போன்ற வன்கொடுமை சொற்களால் அவரை அவமானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

மேலும், அவரது கண் பாதிப்பு குறித்து கிண்டல் செய்ததோடு, செமினார் எடுக்க அனுமதி மறுத்து அவரது படிப்பையும் முடக்க முயன்றதாகப் புகார் எழுந்துள்ளது.

இது குறித்து மாணவியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் என மொத்தம் 6 பேரை கல்லூரி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.

தனது மகள் மருத்துவராகி சமூகத்திற்குச் சேவை செய்ய வேண்டும் என்ற கனவோடு இருந்ததாகவும், ஆனால் பேராசிரியர்களின் தொடர் மன உளைச்சலே அவரது உயிரிழப்பிற்கு காரணம் என்றும் மாணவியின் தாயார் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.