மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு துணை டி.எஸ்.பி. சுந்தரேசன் மீது உயர் அதிகாரிகள் பழிவாங்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருவதாக பரபரப்பான விவகாரம் உருவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக, அவருடைய அலுவலக வாகனம் பறிக்கப்பட்டு விட்டதாகவும், இவர் வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு நடந்து செல்வது போன்ற வீடியோவும் ஊடகங்களில் வெளியானது. இதற்குப் பிறகு மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின், பணிச்சுமை காரணமாக பெறப்பட்ட வாகனம் தற்போது திருப்பி ஒப்படைக்கப்பட்டதாக விளக்கமளித்தார்.

இந்நிலையில், தமது மீது உயர் அதிகாரிகளான கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் ஐ.ஜி. செந்தில்வேலன் ஆகியோர் காழ்ப்புணர்ச்சி அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருவதாக சுந்தரேசன் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேட்டி அளித்தார்.

இதையடுத்து தஞ்சை மண்டல டிஐஜி ஜியாவுல் ஹக் விசாரணை நடத்தியதின் அடிப்படையில், அவரை பணியிடை நீக்க பரிந்துரை செய்யப்பட்டது. தற்போது உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவுப்படி, சுந்தரேசன் மீது பணியிடை நீக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

செய்தியாளர்களிடம் இன்று பேசிய சுந்தரேசன், “உயர் அதிகாரிகள் மீது புகார் கூறியதற்காகவே என்மீது பழிவாங்கல் நடக்கிறது. என் மீது பாலியல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறன. ஆனால், இத்தனை நாட்களாக ஏன் விசாரணை நடக்கவில்லை? ஏன் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை? என் தந்தைக்கு மன அழுத்தம் ஏற்பட்டுவிட்டது. அவர் சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்க்க அனுமதி கேட்டும் பதில் இல்லை. எனக்கு உயிருக்கு ஆபத்து உள்ளது. எனது பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

தேசிய மனித உரிமைகள் ஆணையும், தமிழக முதல்வரும் இதில் தலையிட வேண்டும்,” என உணர்ச்சிபூர்வமாக கூறினார். இந்த விவகாரம் தமிழக போலீஸ் துறையின் நடத்தை மீதான பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது.