சத்தீஸ்கர் மாநில காவல் துறையில் போலி சாட்சிகளைப் பயன்படுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட பொய் வழக்குகளைப் பதிவு செய்ததாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நைகடி காவல் நிலைய ஆய்வாளராகப் பணியாற்றிய ஜெகதீஷ் சிங் தாக்கூர் என்பவர் மீது தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் திவாரி என்பவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

ஆய்வாளர் தாக்கூரின் பதவிக்காலத்தில் பதிவு செய்யப்பட்ட நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட முதல் தகவல் அறிக்கைகளில் ஒரே நபர்களே தொடர்ச்சியாக சாட்சிகளாகக் காட்டப்பட்டுள்ளனர். குறிப்பாக அமித் குஷ்வாஹா என்ற நபர் பெரும்பாலான வழக்குகளில் சாட்சியாகச் சேர்க்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த முறைகேடு குறித்து மௌகஞ்ச் காவல் கண்காணிப்பாளர் திலீப் சோனி நடத்திய முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து ஆய்வாளர் ஜெகதீஷ் சிங் தாக்கூர் உடனடியாகப் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினரின் நடவடிக்கைகளுக்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கவும் ஊழல் நடவடிக்கைகளுக்குத் துணையாகவும் இந்த போலி சாட்சிகள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சாட்சிகளாகக் குறிப்பிடப்பட்டவர்களில் சிலர் தங்களுக்குத் தெரியாமலேயே தங்கள் பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் விதிமீறல்கள் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.