உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் அருகேயுள்ள தாஸ்னா பகுதியில், ஆறு வயது சிறுமி ஒருவரை அவரது வளர்ப்பு தாய் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த அக்ரம் என்பவரின் முதல் மனைவி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், அவர் நிஷா பர்வீன் என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு அக்ரம் மற்றும் நிஷா ஆகிய இருவரும் சேர்ந்து முதல் மனைவியின் குழந்தைகளைத் தொடர்ந்து சித்திரவதை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சிறுமி ஷிபாவை நிஷா கொடூரமாகத் தாக்கியதில் சிறுமி உயிரிழந்தார்.

சிறுமி உயிரிழந்ததைத் தொடர்ந்து, யாருக்கும் தெரியாமல் சடலத்தைப் புதைக்க அவரது குடும்பத்தினர் ரகசியமாக ஏற்பாடு செய்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாகச் சிறுமியின் தந்தை அக்ரம் மற்றும் வளர்ப்பு தாய் நிஷா பர்வீன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.