அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவுடனான வர்த்தக உறவை “ஒருதலைப்பட்சமான பேரழிவு” என்று கடுமையாக விமர்சித்து, இந்தியா மீது விதிக்கப்பட்ட 50 சதவீத வரி முடிவு தாமதமானது என்று கறாராகத் தெரிவித்தார்.

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் இராணுவ உபகரணங்களை அதிக அளவில் வாங்குவதாகவும், உக்ரைன் போருக்கு மறைமுகமாக உதவுவதாகவும் குற்றம்சாட்டிய டிரம்ப், இந்திய பொருட்களுக்கு ஏற்கனவே 25 சதவீத வரியுடன் கூடுதலாக 25 சதவீத அபராத வரி விதித்து உத்தரவிட்டார்.

2024-ல் இந்தியா அமெரிக்காவுக்கு 80 பில்லியன் டாலர் மதிப்பில் பொருட்கள் ஏற்றுமதி செய்த நிலையில், அமெரிக்காவிடம் இருந்து 41.5 பில்லியன் டாலர் மதிப்பில் மட்டுமே இறக்குமதி செய்ததாக டிரம்ப் சுட்டிக்காட்டினார். இந்தியாவின் உயர் வரிகள் அமெரிக்காவுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இந்தியா தற்போது வரிகளை முற்றிலுமாகக் குறைக்க முன்வந்தாலும், “இது மிகவும் தாமதமான முடிவு” என்று டிரம்ப் கூறினார். “பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா வரிகளைக் குறைத்திருக்க வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் நெருக்கம் காட்டியதைத் தொடர்ந்து டிரம்பின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.

இந்தியாவின் வர்த்தக நிலைப்பாடு மற்றும் ரஷ்யாவுடனான உறவு ஆகியவை அமெரிக்காவுக்கு சவாலாக இருப்பதாகவும், இந்தியாவின் வரி குறைப்பு முயற்சி தற்போது பயனளிக்காது என்றும் டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.