அதிமுகவுடன் கூட்டணி அமைக்காததற்கான உண்மையான காரணத்தை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தற்போது வெளிப்படையாக உடைத்துப் பேசியுள்ளார்.

தேர்தல் நெருங்கும் வரை கூட்டணி குறித்துப் பேச எடப்பாடி பழனிசாமி தங்களை அழைக்கவே இல்லை என்றும், கூட்டணியை விட்டு வெளியேறிய பாமக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுக்கே அதிமுக முன்னுரிமை கொடுத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். தேமுதிகவை அதிமுக கண்டுகொள்ளாமல் விட்டதால், தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், இதன்காரணமாகவே ஆரம்பத்திலிருந்தே தேமுதிகவை அழைத்து வந்த திமுகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் இந்த உதாசீனப் போக்கே தங்களை மாற்று முடிவை எடுக்கத் தூண்டியதாக பிரேமலதா கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.