அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து தமிழக அரசின் கவர்னர் உரை மற்றும் தனது மகனின் அரசியல் வருகை குறித்து பல்வேறு முக்கியக் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். கவர்னர் உரையில் புதிய திட்டங்கள் ஏதேனும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஏற்கனவே வெள்ளை அறிக்கையில் இருந்த விஷயங்கள் மட்டுமே அதில் இடம்பெற்றுள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.
குறிப்பாக, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க அரசு தவறிவிட்டதாகவும், தவெக ஆட்சி அமைந்த பிறகு கடந்த 38 நாட்களில் மட்டும் 150 சிறுமிகளுக்கு பாலியல் கொடுமைகளும், 130 கொலைகளும் நடந்துள்ளதாகக் கூறி, பெண்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்த அரசின் வாக்குறுதிகள் என்ன ஆனது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து தனது மகனின் அரசியல் வருகை குறித்து ஊடகங்களில் வெளியாகும் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்தார். தனது மகன் மிதுன் அரசியலுக்கு வரப்போவதாகக் கூறப்படும் செய்திகள் முற்றிலும் தவறானவை என்று மறுத்த அவர், தனது மகன் அதிமுகவில் ஒரு அடிப்படை உறுப்பினராக மட்டுமே உள்ளார் என்றும், கட்சியில் எந்தவிதப் பொறுப்பிலும் இல்லை என்றும் தெளிவுபடுத்தினார். மேலும், தனது மகன் மிதுன் எதிர்காலத்திலும் அரசியலுக்கு வரமாட்டார் என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்வதாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் உறுதிபடக் கூறினார்.
