அரசுத் திட்டமான ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்பதன் மூலம் திரட்டப்பட்ட பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்கள், தற்போது திமுகவிற்காகத் தேர்தல் வேலை செய்யும் ‘PEN’ (Political Engagement Network) என்ற தனியார் அமைப்பிடம் சட்டவிரோதமாகக் கொடுக்கப்பட்டுள்ளதாக ஈபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். அரசை நம்பி மக்கள் அளித்த ரகசியத் தகவல்களைத் தனது தேர்தல் வெற்றிக்காக திமுக மடைமாற்றம் செய்திருப்பது மிகப்பெரிய ஜனநாயக மோசடி என்று அவர் சாடியுள்ளார். இந்தத் தகவல்களை வைத்துக்கொண்டு இப்போது திமுகவினர் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பதாக அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

​தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்க மக்களை ஒன்றிணைப்பதாகக் கூறித் தொடங்கப்பட்ட ஒரு திட்டத்தை, திமுக தனது சுயநலமான தேர்தல் அரசியலுக்குப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது என அவர் குறிப்பிட்டுள்ளார். மக்களின் தனிப்பட்ட தகவல்களைத் தனியார் நிறுவனங்களுக்குத் தாரைவார்த்து, அதன் மூலம் தேர்தல் ஆதாயம் தேட முயலும் திமுகவின் இந்தச் செயல் மக்களின் நம்பிக்கைக்குச் செய்த துரோகம் என்று எடப்பாடி பழனிசாமி தனது விமர்சனத்தில் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.