கோயம்புத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டியில் உள்ள ஒரு உள்ளூர் தொலைக்காட்சியில், நடிகர் விஜய்யின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் சட்டவிரோதமாக ஒளிபரப்பப்பட்ட சம்பவம் சினிமா துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. படம் ரிலீஸான சில நாட்களிலேயே, திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தத் துணிகரச் செயல் அரங்கேறியுள்ளது.

​இது குறித்துத் தகவல் அறிந்ததும் விரைந்து சென்ற அதிகாரிகள் மற்றும் போலீசார், சம்பந்தப்பட்ட உள்ளூர் தொலைக்காட்சி அலுவலகத்திற்குச் சீல் வைத்தனர். அங்கிருந்த கம்ப்யூட்டர், 5 ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் படத்தை ஒளிபரப்பப் பயன்படுத்தப்பட்ட மின்னணு சாதனங்களைப் பறிமுதல் செய்ததோடு, இதற்குத் துணை நின்ற நபரையும் அதிரடியாகக் கைது செய்தனர்.

“திரைப்படத் திருட்டு என்பது தண்டனைக்குரிய குற்றம்” என எச்சரித்துள்ள போலீசார், இது போன்ற சட்டவிரோத ஒளிபரப்புகளில் ஈடுபடும் சேனல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர். விஜய்யின் படம் லீக்கான விவகாரத்தில் ஏற்கனவே அரசியல் மோதல்கள் முற்றியுள்ள நிலையில், இந்த கைது நடவடிக்கை புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.