தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான (அ) மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்சமான வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சமான வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்.

மேலும் இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 01/02/2023 கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.